கொடைக்கானல் உதவி ஆட்சியர் ஆனார் சிவகுரு பிரபாகரன்
சமீபத்தில் பெண் வீட்டாரிடம் வரதட்சணைக்குப் பதில் தங்கள் கிராமத்திற்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மருத்துவ சேவை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து பாராட்டுக்களைக் குவித்த நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ், கொடைக்கானல் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த இவர், ஏழ்மையான குடும்பப் பின்னணியில் பிறந்து இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் புகார் கொடுக்கவரும் மக்களுடன் எளிமையுடன் நட்பாக பழகுவது, உதவி வேண்டுவோருக்கு உடனுக்குடன் உதவி புரிவது, விவசாயப் பிரச்சனைகளை தீர்த்தது என்று மக்கள் மனதை வென்றவர். இப்போது கொடைக்கானலில் தனது சேவையை தொடரவுள்ளார்.
கொடைக்கானலில் உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளதாக இன்று அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு நெல்லை மாவட்ட துணை ஆணையர் சரவணன் ஐ.பி.எஸ், டாக்டர். செந்தில்மார் எம்.பி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

