தமிழகம் மட்டுமின்றி இந்தியாவுக்கே துரோகம் இழைத்தது அதிமுக: சீதாராம் யெச்சூரி சாடல்

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவுக்கே துரோகம் இழைத்தது அதிமுக: சீதாராம் யெச்சூரி சாடல்
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவுக்கே துரோகம் இழைத்தது அதிமுக: சீதாராம் யெச்சூரி சாடல்

"குடியுரிமைச் சட்டம், வேளாண் சட்டம் என பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத செயல்கள் அனைத்துக்கும் அதிமுக ஆதரித்து, தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே அதிமுக துரோகம் செய்துள்ளது" என்றார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியது:

"தமிழக மக்கள் தங்களது வாக்குகள் மூலம் இந்திய அரசியல் சட்டம், மத ஒற்றுமை, வாழ்வாதாரம் போன்றவற்றை பாதுகாப்பார்கள் என இந்தியாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது. பாஜக அரசால் மதவாதம் புகுத்தப்பட்டு, அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் சீரழிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், புலனாய்வு அமைப்பு போன்றவை சுதந்திரமாக செயல்படமுடியாமல் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்பட நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்தான் தமிழக மக்கள் தரும் தேர்தல் முடிவானது இந்தியாவுக்கான முன்மாதிரியாக இருக்கும்.

விவசாயிகள், விசாயத்தை அழிக்கக்கூடிய புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சட்டம் அமலாக்கப்பட்டால் ரேஷன் கடைகள் மூடப்படும். பட்டினியால் மக்கள் அவதிப்படுவார்ககள். ஆனால், இந்தப் பிரிச்னையை பேச மத்திய அரசு தயாராக இல்லை. விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஏழை, எளிய குடும்பங்களை பாதுகாக்கக் கூடிய தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முழுவதுமாக அழிக்கும் முயற்சியை பாஜக அரசு எடுத்து வருகிறது. உள்ளூரில் வேலை வாய்ப்பு இல்லாததால் பிற மாவட்டங்களில் வேலைக்காக குடிபெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில்களும் மூடப்பட்டதால் 15 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். எனினும்,
பொதுத்துறை நிறுவனங்கள், அரசு பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி, மருத்துவமனைகள் என அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. அதன்பிறகு நம் பிள்ளைகள் எங்கு படிப்பார்கள்? எங்கு வேலை தேடிக்கொள்வார்கள்?

தனியார் பெரு முதலாளிகளால் இயற்கை வளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்த வளங்கள் அனைத்தும் நாட்டு மக்களுடையது. பாஜக அரசை அகற்றினால்தான் நாட்டை பாதுகாக்க முடியும். குடியுரிமை சட்டம், அரசியல் சட்டங்களில் திருத்தம் செய்தல், வேளாண் சட்டம் என பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத செயல்கள் அனைத்துக்கும் அதிமுக ஆதரித்துள்ளது. எனவே, தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அதிமுக துரோகம் செய்துள்ளது.

பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணம் தரவும், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்ட விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் நிதி இல்லை என்று கூறிய மத்திய அரசு, பெரு நிறுவனங்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்தது. இதற்கெல்லாம் பாடம் புகட்டும் வகையில் வருகின்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்தி திமுகவை ஆட்சி கட்டிலில் அமரவைக்க வேண்டும்" என்று பேசினார் சீதாராம் யெச்சூரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com