காங். கட்சியில் சேர்ந்த சிவராஜ் சிங் மைத்துனருக்கு சீட்
காங்கிரஸ் கட்சியில் இணைந்த சிவராஜ் சிங் சவுகான் மனைவியின் சகோதரருக்கு சீட் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய பிரதேச மாநிலத்திற்கான வாக்குப் பதிவு நவம்பர் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நான்காவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மனைவியின் சகோதரர் சஞ்சய் சிங் மசானிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் சிங் மசானி கடந்த வாரம் தான் கமல்நாத் தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2013 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட சஞ்சய் சிங் முயன்றார். ஆனால், அவருக்கு பாஜகவில் சீட் வழங்கப்படவில்லை. இந்த முறையும் அவரது வாரசியோனி சட்டசபை தொகுதியில் ஆர்.எஸ்.எஸ் பின் புலத்தில் உள்ள பாஜக வேட்பாளர் யோகேந்திர நிர்மலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்தார். சேர்ந்த ஒரே வாரத்தில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 230 சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 213 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 17 வேட்பாளர்கள் பட்டியல் மீதமுள்ளது. இதனிடையே, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.