குஜராத் களத்தில் போராடிய ராகுலுக்கு வாழ்த்துகள்: சிவசேனா
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை நெருங்கியதுடன், இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ள காங்கிரஸுக்கும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு சிவசேனா கட்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 106 இடங்களிலும், காங்கிரஸ் 74 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் பிரதான கட்சிகளுள் ஒன்றான சிவசேனா, குஜாரத் வெற்றிக்கு களத்தில் போராடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, 47 வயது மட்டுமே நிரம்பிய ராகுல் காந்தி கட்சியின் தலைமையை ஏற்று மீண்டும் அதன் பாரம்பரியத்தை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிவசேனா கட்சி சார்பிலும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெருக்கடியான சூழலில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ளதாகவும், காங்கிரஸ் வெற்றி உச்சத்திற்கும் அல்லது படுகுழிக்கும் செல்வது அவர் கையில்தான் உள்ளது என்றும் கூறியுள்ளது. தற்போது குஜராத்தில் பெரும் கட்சியுடன் போட்டியிட்டு, பெருமளவு தொகுதியை கைப்பற்றியுள்ளது ராகுலின் தன்னம்பிக்கையை காட்டுவதாகவும், அது அவரை மேலும் முன்னேறச்செய்யும் என்றும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது. கடந்த 60 வருடங்களில் இல்லாத வளர்ச்சியை, கடந்த 3 வருடத்தில் மட்டுமே இந்தியா அடைந்துள்ளதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா? என்று கூறியுள்ளது. மேலும் யாருக்கு தெரியும், கடந்த 150 வருடங்களில் போராடி பெறாத சுதந்திரத்தை கடந்த ஒரு வருடத்தில்தான் பெற்றுள்ளோம் என வரலாற்றில் சேர்ப்பார்களோ என்றும் தோன்றுகிறது.