இரட்டை இலை விசாரணையை தினகரன் தரப்பு தடுக்க நினைக்கிறது: சி.வி.சண்முகம்
தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் இரட்டை இலை சின்னத்தின் விசாரணையை தினகரன் தரப்பினர் தடுக்க நினைக்கின்றனர் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாளை டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ள விசாரணைக்காக டெல்லி புறப்பட்டு சென்ற தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றபோது, எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக எடுத்துரைத்துள்ளோம். இதுதொடர்பாக நாளை நடைபெறவுள்ள விசாரணையில், தேவையான ஆவணங்களை தேர்தல் ஆணையம் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டதால், தேவையான அனைத்து ஆவணங்களையும் சட்டப்படியும், முறைப்படியும் சமர்பித்துள்ளோம். தினகரன் தரப்பினர் தான் இந்த விசாரணையை காலதாமதப்படுத்த வேண்டும் என்றும், விசாரணை நடைபெறக்கூடாது என்றும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அவை அனைத்தையும் முறியடித்து, தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து, உண்மையான அதிமுக, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் தான் செயல்படுகிறது என்பதை நிரூபித்து, இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்.” என்று கூறினார்.