திருமணம் செய்வதாகக்கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் போக்சோவில் சிறையிலடைப்பு
ஓமலூர் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமலூர் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதற்காக கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை தீவட்டிப்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள டேனிஸ்பேட்டை ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் திம்மராயன் ஜெயா தம்பதிகளுக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ளார். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர்களின் மகளை தருமபுரி மாவட்டம், சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவருடைய மகன் அசோக் என்ற 25 வயது வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமியை கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் ஜெயா தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தருமபுரி சிக்கம்பட்டி பகுதியில் இருந்த இளைஞர் அசோக்கை கைது செய்து சிறுமியை மீட்டனர்.
பின்னர் இளைஞர் அசோக் மீது போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியை கடத்துதல், வன்கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.