வாக்கு எண்ணும் மையத்தை மாற்ற கோரி செந்தில் பாலாஜி கடிதம்
அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறையை மாற்ற வேண்டுமென திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அவரளித்த பேட்டியில், “அரவக்குறிச்சி தேர்தல் அலுவலரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். வாக்கு எண்ணிக்கைக்காக இரண்டு அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு அறைகளில் ஆயிரம் பேருக்கு மேல் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இடநெருக்கடி உண்டாகும். வாக்கு எண்ணும் போது சிரமங்கள் ஏற்படும். அரங்கம் போன்ற பெரிய இடத்திற்கு வாக்கு எண்ணிக்கையை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் நாங்கள் அனுமதி வாங்கிவிட்டோம். அதனால் வாக்கு எண்ணும் இடத்தை மாற்ற முடியாது என ஆட்சியர் தெரிவித்து விட்டார்.” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கரூர் மக்களவைத் தொகுதி மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் அறைகளில் இடநெருக்கடியை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் “வாக்கு எண்ணும் மையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் முகவர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படும். பிற வேட்பாளர்களின் முகவர்களுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர் பெற்ற வாக்குகள், எண்ணிக்கை மையத்திலுள்ள பலகையில் எழுதப்படும். டிஸ்பிளே மூலமும் வேட்பாளர் பெற்ற வாக்குகள் வெளியிடப்படும். பத்திரிகையாளர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டு அங்கும் வாக்கு விவரங்கள் வெளியிடப்படும்.” எனத் தெரிவித்தார்.