18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் : செந்தில் பாலாஜி பேட்டி
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நாளை வர உள்ள தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கான தீர்ப்பாக இருக்கும் எனவும் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தும் தீர்பாக அமையும் எனவும் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை போத்தனூர் பகுதியில் இஸ்லாமியர்கள் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்த போது “18 எம்.எல்.ஏ தகுதி நீக்கம் குறித்து நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கை இருப்பதாகவும், 18 பேரும் சட்டமன்றம் செல்வோம் எனவும் டி.டி.தினகரன் தலைமையில் செயல்படுவோம்” எனவும் தெரிவித்தார்.
மேலும் மக்களுக்கு எதிராக செயல்படும் எடப்பாடி தலைமையிலான அரசு வீட்டிற்கு செல்லது உறுதி எனவும் அப்போது தெரிவித்தார். மக்கள் எதிர்ப்பையும் மீறி சென்னை சேலம் இடையே பசுமை வழிச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபவது, முதல்வர் அடாவடி தனமான செயலில் ஈடுபடுவதை காட்டுவதாக சுட்டிக்காட்டினார். இதே போல சேலம் மக்கள் விவசாய நிலங்களை காக்க விமான நிலையம் விரிவாக்கம் வேண்டாம் எனக் கூறியும் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோ வினரை இந்த அரசு அழைத்து பேசவில்லை எனக் கூறிய அவர், அரசு எந்திரத்தை கையில் வைத்து கொண்டு ஊடகத்துறையை ஒடுக்கும் இந்த அரசிற்கு ஆட்சி மாற்றமே முடிவு எனவும் கூறினார். ஆட்சி மாறினால், தற்போது ஊழலில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி எனவும் தெரிவித்தார்.