டிடிவி தினகரனை சந்தித்தார் அதிமுக எம்.பி. செங்குட்டுவன்
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனை, அதிமுக எம்.பி. செங்குட்டுவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வேலூர் தொகுதி அதிமுக எம்.பி. செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் தொகுதி எம்.பி. உதயகுமார் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியில் இருந்து தினகரன் தரப்பு அணிக்கு மாறினர். பின்னர் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம், கட்சி அலுவலகம் உள்ளிட்டவை மதுசூதனன் தலைமையிலான அதிமுக அணிக்கு என தேர்தல் ஆணையம் தீர்ப்பு அளித்தது.
இதனையடுத்து பலரும் தினகரன் அணியில் இருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு மாறினர். அதில், வேலூர் எம்.பி. செங்குட்டுவனும் ஒருவர். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், செங்குட்டுவன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து தினகரன் தரப்பினருக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் பலர் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.