யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை பெத்தானியாபுரம் பல்லவன் நகர் பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, சிஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என
ஹெச்.ராஜா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அப்படியொரு கருத்தினை ஹெச்.ராஜா சொல்லி இருக்கிறாரா என்பது தெரியவில்லை. நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும். ஸ்டாலினை காட்டிலும் எங்களுக்கு பெரிய தலைவர் யாரும் கிடையாது. அவர்தான் இன்று எதிர்க்கட்சி தலைவர். திமுகதான் எங்களுடைய முக்கியமான எதிர்க்கட்சி. வேறு யார் சொல்வதை குறித்தும் சிந்திப்பது இல்லை.
மக்கள்தான் எல்லோருக்கும் எஜமானர்கள். இவங்க என்ன கலைக்க வேண்டும் என சொல்வது? இதுஎன்ன கருக்கலைப்பா?. தமிழக முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தொடர்ந்து விக்கெட் எடுத்துக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியினர் விக்கெட்டை இழந்து கொண்டே இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினாலேயே தாங்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஸ்டாலின் முன்பு சொல்லிக்கொண்டிருந்தார். தற்போது சொல்வதில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், “யார் இணைந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும். அவர்கள் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்லட்டும்.
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதிமுக அரசு தெளிந்த நீரோடை. நாடாளுமன்ற எம்பி குறித்த பட்டியல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும். சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கும். இஸ்லாமிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பயப்பட வேண்டாம்.
முதலமைச்சரின் செயல்பாட்டால் காணாமல் போய் விடுவோம் என்ற பயத்தில் ஸ்டாலின் இதுபோன்ற போராட்டங்களை தூண்டி விடுகிறார்” எனக் குற்றம் சாட்டினார்.