ரூ.100 கோடி மதிப்பில் ரொக்கம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தமிழகத்தில் நேற்றுமுன்தினம் வரை சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகிப்பதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன்படி, நேற்றுமுன்தினம் வரை நடைபெற்ற சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 99 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், சேலை, மடிக்கணினி, குக்கர் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் மட்டும் ஒரே நாளில் 48 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 ஆயிரத்து 900 லிட்டர் மதுபானங்களும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.