“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்

“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்
“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்

ராஜிவ் காந்தி படுகொலை குறித்த தனது பேச்சால், ஏழு பேர் விடுதலை பாதிக்கப்படாது என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

விக்கிரவாண்டி தொகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பரப்புரை மேற்கொண்ட சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்றும், ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என்றும் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திருமாவளவன் உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக அதனை எதிர்த்தது. தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

இந்நிலையில் புதுச்சேரி வந்திருந்த சீமானிடம் புதிய தலைமுறை செய்தியாளர் சில கேள்விகளை முன்வைத்தார். அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசிய போது, “ராஜிவ் காந்தி படுகொலை குறித்த தனது பேச்சால், ஏழு பேர் விடுதலை எப்படி பாதிக்கப்படும்? கடந்த 28 ஆண்டுகளாக எங்களுக்கு தொடர்பு இல்லை என்று சொன்னோம். ஏன் நீங்கள் விடுதலை செய்யவில்லை? இப்போதும் நான் சொல்கிறேன்; எங்களுக்கும் அந்தக் கொலைக்கும் தொடர்பு இல்லை. ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? ஏற்பதாக இருந்தால் இதை ஏற்றுக் கொண்டு ஏழு பேரையும் விடுதலை செய்யுங்கள். தடையை நீக்குங்கள். அதை ஏன் செய்யவில்லை. 

இப்போது நான் சொன்னதால் விடவில்லையா? இல்லையென்றால் விட்டு இருப்பீர்களா? இது ஒரு சுத்தமான ஏமாற்று வேலை. இது என்னுடைய நிலைப்பாடு. என் இனத்தை கொன்று குவித்தது காங்கிரஸ். கூட நின்றது திமுக. வேடிக்கை பார்த்தவர்கள் அதிமுகவும், பாஜகவும். இது வரலாற்று பதிவு. அவங்கதான் சொல்கிறார்கள் ‘இன்றையச் செய்தி நாளைய வரலாறு’ என்று. 

எனக்கு கீழே வருகின்ற தலைமுறைக்கு நான் நம்ம இனத்தை கொன்றது யார்? கூட நின்றது யார்? எவ்வளவு தூரோகத்தால் வீழ்த்தப்பட்டோம் என்று எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ் காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன்” என்று அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com