சீமான் களம் காணும் திருவொற்றியூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? - ஒரு பார்வை

சீமான் களம் காணும் திருவொற்றியூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? - ஒரு பார்வை
சீமான் களம் காணும் திருவொற்றியூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? - ஒரு பார்வை

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால் அது நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. அந்த தொகுதியின் களம் எப்படி இருக்கிறது? - ஒரு பார்வை.

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், சீமான் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.குப்பன், திமுக சார்பில் கே.பி.பி.சங்கர், மக்கள் நீதி மய்யம் சார்பாக டி.மோகன், அமமுக சார்பாக சவுந்திரபாண்டியன் ஆகியோர் களம் கண்டுள்ளனர். 1977-ம் ஆண்டில் இருந்து இதுவரை 12 தேர்தல்களை திருவொற்றியூர் தொகுதி சந்தித்துள்ளது. 6 முறை திமுக, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 1 முறை மற்றும் காந்தி காமராஜ் காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த முறை கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு 12 ஆயிரத்து 497 வாக்குகளை அவர் பெற்றார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், திருவொற்றியூரில் 15 ஆயிரத்து 748 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. இந்தமுறை திருவொற்றியூரில் சீமான் களம் காண்கிறார். அதிமுக சார்பில் போட்டியிடும் குப்பன், 1991, 2011 தேர்தல்களில் இதே திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தற்போது 3 ஆவது முறையாக இத்தொகுதியில் களம் காண்கிறார்.

திமுகவை பொறுத்தவரை கடந்த 2016 தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற்ற கே.பி.பி.சாமியின் சகோதரர் கே.பி.பி. சங்கர் நிறுத்தப்பட்டுள்ளார். சென்னை மாமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் உள்ள இவர், முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அமமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியன், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். தற்போது சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூரில் களம்காண்கிறார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன், அக்கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். அக்கட்சியின் சார்பில் முதன்முறையான தேர்தல் களம் காண்கிறார். மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள திருவொற்றியூர் தொகுதி, எந்த வேட்பாளருக்கு மதிப்புமிகு வெற்றியை அளிக்கப்போகிறது என்று தேர்தலுக்குபின் தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com