ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - விரிவான தகவல்கள்

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - விரிவான தகவல்கள்
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - விரிவான தகவல்கள்

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக 1700 பேரா மிலிட்டரி கம்பெனிகளை பயன்படுத்தி விரிவான பாதுகாப்பினை வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசம்,உத்தராகண்ட், பஞ்சாப்,கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் இன்னும் சில வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா, ஒமைக்ரான் பரவல் ஒருபுறம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மறுபுறம் என பல சிக்கல்களுக்கு மத்தியில்தான் இந்த தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

ஏற்கனவே, பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு, டெல்லியின் எல்லைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு நிரப்பப்பட்ட பை உள்ளிட்டவை எல்லாம் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு பெரும் சவாலான விஷயங்களாக பார்க்கப்படுகின்றது. மேலும், குடியரசு தினவிழாவை ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தி சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில், தேர்தல் சமயத்திலும் அச்சுறுத்தல் தொடரும் என்பதால் இந்த முறை பாதுகாப்பினை சற்று கூடுதலாகவே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து மாநிலங்களுக்கும் மொத்தமாக ஒவ்வொரு கம்பெனிக்கும் 100 வீரர்களை கொண்ட 1700 கம்பெனி துணை ராணுவப் படையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, நாட்டிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு படைகளை உரிய இடத்தில் கொண்டு சேர்ப்பது என்பது சற்று கடினமான காரியம் என்பதால், ஏற்கனவே மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 100 கம்பெனி வீரர்கள் உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் குறிப்பாக பதற்றம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இவைதவிர, நூற்றி ஐம்பது துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஏழு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடியும்வரை மொத்தம் 380 லிருந்து 400 கம்பெனிகள் துணை ராணுவ படையினர் பயன்படுத்த பட்டிருப்பார்கள் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர். இதில் 50 சிஆர்பிஎப் கம்பெனி வீரர்கள், 30 எல்லை பாதுகாப்பு படை கம்பெனிகள், 20 மத்திய தொழிலக பாதுகாப்பு படை கம்பெனிகள் மற்றும் கூடுதலாக இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை கம்பெனிகளையும் கொண்டு மிக விரிவான முறையில் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் ஒருபுறம், அண்டை நாடுகளுடனான எல்லை மற்றொருபுறம் என சமீபத்தில் ஏற்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கான பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த முறை பஞ்சாப் மாநிலத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 450 கம்பெனி பாதுகாப்பு படைகள் பயன்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இந்த முறை 100 கம்பெனிகள் கூடுதலாக அதாவது 550 கம்பெனி பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் இன்னும் கூடுதலாக பாதுகாப்பு வீரர்கள் அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு மாநிலங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு கம்பெனிகளை தவிர்த்து மீதமுள்ள சுமார் 400 கம்பெனி வீரர்கள் உத்தராகண்ட் கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட இருக்கிறார்கள். கூடுதலாக எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 கம்பெனிகள் மணிப்பூர் மாநிலத்திலும், 6 கம்பெனி வீரர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திலும்
பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபட உள்ளனர். இவைதவிர ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த 70 கம்பெனி வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல் துறையினரும் ஐந்து மாநிலங்களிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றார்கள்.

கொரோனா விதி முறைகளை கடைப்பிடிப்பது, வாக்குச்சாவடி மையங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவது, வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பது, வாக்கு எண்ணிக்கை அனறு விரிவான பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பல பணிகளை இந்த பாதுகாப்பு வீரர்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com