அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை வழக்கு?
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் குடியுரிமை பெற்று ஒரு நிறுவனத்தின் இயக்குநராக ராகுல்காந்தி ஆதாயம் தரும் பதவி வகித்து வருவதாக பாரதிய ஜனதா மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 2017ஆம் ஆண்டு அளித்தார். அந்தப் புகார் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 30ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் குடியுரிமை பிரச்னையால் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மத்திய உள்துறை அனுப்பிய நோட்டீஸில், “பிரிட்டனின் வின்செஸ்டர் நகரிலுள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவும், செயலாளராகவும் ராகுல் காந்தி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் செலுத்திய 2005 மற்றும் 2006-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் தாக்கலில் ராகுலின் பிறந்த தேதி சரியாக குறிப்பிடப்பட்டு, பிரிட்டனைச் சேர்ந்தவர் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும். எனவே இதுகுறித்து ராகுல் காந்தி விளக்கம் அளிக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, “அந்த நிறுவனத்தின் உண்மையான சான்றிதழில் ராகுல் காந்தி இந்தியர் என்றுதான் உள்ளது” எனத் தெரிவித்தது. ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ராகுலின் குடியுரிமை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனப் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்தார். அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆதரங்களில் உண்மை தன்மையில்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததது குறிப்பிடத்தக்கது.