பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை - சத்யபிரதா சாஹூ

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை - சத்யபிரதா சாஹூ
பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை - சத்யபிரதா சாஹூ

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என்றும் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்னை நடக்கவில்லை என்றும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனால் மற்றொரு தரப்பினர் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்து 20க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இருசக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, தாக்குதல் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து வாக்குப்பதிவின்போது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமியைச் சந்தித்த திருமாவளவன் விரிவாக விளக்கினார். பின்னர் பொன்பரப்பி கிராமத்தில், 4 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டுமெனெ கோரிக்கையும் விடுத்தார். அதற்கு விஜயலட்சுமி மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர் சந்திப்பு போது, இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அரியலூர் பொன்பரப்பில் மறுவாக்குப் பதிவு அவசியம் இருக்காது என்று தெரிவித்தார். மேலும் அங்கு இருதரப்பினர்க்கு மட்டுமே பிரச்சனை ஏற்பட்டது என்று குறிப்பிட்ட அவர், வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சனை ஏதும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com