ஜெயலலிதா விசாரணை ஆணையத்தில் சசிகலா வாக்குமூலம்
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த கமிஷன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனை, உறவினர்கள் தீபா, விவேக் ஜெயராமன், தீபக் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி, விசாரணை ஆணையம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சிலர் சசிகலாவிற்கு எதிராக சாட்சியம் வழங்கிருப்பதினால் அவர் ஆணையத்தில் நேராகவோ வக்கீல் மூலமாகவோ ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் பிரமாண பத்திரம் மூலமாகவோ வாக்குமூலத்தை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் கோரி சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் வாக்குமூலத்தை அவரது வழக்கறிஞர் அரவிந்தன் சீல் வைத்த கவரில் ஆறுமுகசாமியிடம் வழங்கினார். மேலும் இனி விசாரணை ஆணையத்தில் ஆஜராக உள்ளவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய கடிதம் கொடுத்துள்ளதாக அரவிந்தன் தெரிவித்தார்.