சசிகலாவை நீக்குவது பற்றி வைத்திலிங்கம் பேசியதற்கு அமைச்சர் ஓஎஸ் மணியன் எதிர்ப்பு
சசிகலாவை நீக்குவது பற்றி வைத்திலிங்கம் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு ஓஎஸ் மணியன் அளித்த பேட்டியில், சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுப்பது பற்றி வைத்திலிங்கம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறினார். மேலும், சசிகலாவை நீக்குவது பற்றி இன்றைய இணைப்புக் கூட்டத்தில் பேசப்படவில்லை எனவும், பொதுக்குழு கூடிதான் பொதுச்செயலாளர் பற்றி முடிவெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவை நாளை காலை 10 மணிக்கு சந்திக்க இருப்பதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, சிறிது நேரம் தியானம் செய்த பிறகு செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, 10 பேரைக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைப்பதில் அவசரம் காட்டியது ஏன் என்று கேட்டார். சசிகலா மற்றும் தினகரனை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.