‘மனைவியின் நகையை மீட்க ‘பார்’ நண்பருடன் ஏடிஎம் கொள்ளைக்கு பிளான்’ : இருவர் கைது
சேலத்தில் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியில் இந்தியன் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 4ஆம் தேதி அதிகாலை இந்த ஏடிஎம் மையத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க இருவர் முயன்றனர். அப்போது நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து வாகனம் வருவதைக் கண்ட கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் ரூ.20 லட்சம் பணம் தப்பியது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் முகக்கவசம் அணிந்து இருந்தால், அவர்களை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர்கள்தான் கடந்த 4ஆம் தேதி இந்தியன் வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ் (24), தொளசம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. இருவரும் தாரமங்கலம் பகுதியில் உள்ள பாரில் மது குடிக்க சென்றபோது நட்பாகியுள்ளனர். பின்பு பணத்தேவையின் காரணமாக இருவரும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக விக்னேஷின் மனைவி வங்கியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ள நகையை மீட்க பணம் தேவைப்பட்டதால், ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.