IPL 2020: ராஜஸ்தான் - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை.. பலம், பலவீனம் என்ன?

IPL 2020: ராஜஸ்தான் - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை.. பலம், பலவீனம் என்ன?
IPL 2020: ராஜஸ்தான் - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை.. பலம், பலவீனம் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் ‌நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

மோசமான தோல்விகளால் துவண்டிருந்த ராஜஸ்தான் அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கண்ட வெற்றியை அடுத்து பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ஸ்மித், உத்தப்பா ஆகியோர் ரன் சேர்க்க தொடங்கியுள்ளது அணிக்கு நல்ல செய்தி. ஆனால் அதிரடி வீரர்களான ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் ரன்களைச் சேர்க்க திணறுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு. பட்லர் மத்திய வரிசையில் மிகப்பெரிய பலமாக உள்ளார்.

ஆல்ரவுண்டர் திவேதியா, ரியன் பரக் மத்திய வரிசைக்கு வலுசேர்த்து வருகின்றனர். வேகப்பந்து வீச்சில் ஆர்ச்சரும், இளம் வீரர் கார்த்திக் தியாகியும் விக்கெட்டுகளை வீழ்த்தும் அஸ்திரங்களாக உள்ளனர். திவேதியாவின் ஸ்பின் ஜோடியான ஸ்ரேயஸ் கோபாலும் ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் துருப்புச் சீட்டாக உள்ளார். 5 ஆவது பந்து வீச்சாளராக சேர்க்கப்படும் உனத்கட், அங்கித் ராஜ்பூர் இருவரும் குறிப்பிடும்படி எதுவும் சாதிக்கவில்லை.

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று போராடி தோல்வி கண்ட விரக்தியில் உள்ளது ஹைதராபாத் அணி. கேப்டன் வார்னர், பேர்ஸ்ட்டோவ், வில்லியம்சன், மணீஷ் பாண்டே ஆகியோர் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக வலம் வருகின்றனர். ஆல்ரவுண்டர்கள் அப்துல் சமத் மற்றும் இளம் வீரர் பிரியம் கார்க் -ஆகியோர் பேட்டிங்கிற்கு கூடுதல் வலு சேர்க்கின்றனர்.

தமிழக வீரர் விஜய் சங்கரின் பங்களிப்பு மெச்சும்படி இல்லை. பந்து வீச்சில் நடராஜன், கலீல் அகமது, சந்தீப் சர்மா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை வாரி வழங்குவது சிக்கலே. ரஷீத் கானின் மாயாஜால பந்துகள் அணிக்கு பவுலிங்கில் உள்ள மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு நீடிக்கும் என்பதால் இரு அணிகளும் வகுக்கப்போகும் வியூகங்களே இன்றைய போட்டியின் மீதான சுவாரஸ்யம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com