கொரோனாவில் இருந்து மீண்டு வந்து சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்! குவியும் பாராட்டுகள்

கொரோனாவில் இருந்து மீண்டு வந்து சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்! குவியும் பாராட்டுகள்
கொரோனாவில் இருந்து மீண்டு வந்து சதம் விளாசிய தேவ்தத் படிக்கல்! குவியும் பாராட்டுகள்

நடப்பு சீசன் ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முன் வரிசை ஆட்டக்காரர்களில் முக்கியமானவராக உருவெடுத்துள்ளார் இளம் வீரர் தேவ்தத் படிக்கல். கொரோனாவில் இருந்து மீண்ட அவர் அணிக்கு திரும்பிய மூன்றாவது போட்டியிலேயே முத்திரை பதிக்கும் சதத்தை விளாசியுள்ளார்.

தேவ்தத் படிக்கல் கர்நாடகாவைச் சேர்ர்ந்த 20 வயது இடது கை பேட்ஸ்மேன். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வெளிப்படுத்திய மெச்சத்தக்க ஆட்டங்களின் மூலம் கடந்த சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இவரது நேர்த்தியான ஆட்டத் திறன் மீது நம்பிக்கை கொண்ட கேப்டன் கோலி அவருக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

கிட்டிய வாய்ப்பை செவ்வனே பயன்படுத்திக் கொண்ட படிக்கல் கடந்த சீசனில் பெங்களூரு அணியின் பேட்டிங் தூணாக வலம் வந்தார். அந்த சீசனில் பெங்களூரு அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரரும் இவரே. 15 போட்டிகளில் களமிறங்கிய படிக்கல் 473 ரன்களை விளாசி இருந்தார். இந்திய அணிக்கு விளையாடாமல் ஐபிஎல்லில் அறிமுகமான முதல் சீசனிலேயே 400 ரன்களுக்கு மேல் சேர்த்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார் படிக்கல்.

அணியில் கிட்டிய வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட படிக்கலுக்கு இடியாய் விழுந்தது கொரோனா பரிசோதனை முடிவு. சீசனின் முதல் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அவர் களமிறங்கவில்லை. உடல் நலம் தேறி அணிக்கு திரும்பிய படிக்கலால் இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் புதிய சவால்களுடன் களமிறங்கினார் படிக்கல்.

எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிக்கும் படிக்கல் இன்னிங்ஸின் தொடக்கம் முதலே அதிரடி பாணியைக் கையில் எடுத்தார். ராஜஸ்தான் பவுலர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிகளாக சிதறடித்தார் படிக்கல். ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கேப்டன் கோலி சாந்தமாக ஆட்டத்தை நகர்த்திக் கொண்டிருக்க, மறுபுறம் அதிரடியால் வாண வேடிக்கை காட்டினார் படிக்கல். 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உதவியோடு 101 ரன்கள் விளாசிய அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆர்சிபி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வித்திட்டார். ஐபிஎல்லில் படிக்கலுக்கு முதல் சதமாகும். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் ஒருவர் ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் விளாசிய சதமும் இதுவே. நேர்த்தியான பேட்டிங்கிற்கு அங்கீகாரமாக இருந்த படிக்கலுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

கொரோனாவில் இருந்து மீண்டு அணியில் இடம் பிடித்த 3 ஆவது போட்டியிலேயே அணிக்கு வெற்றியை வசப்படுத்தும் விதமாக சதம் விளாசிய படிக்கலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com