அதிமுக எனும் ஆலமரத்தை வெட்டி வீழ்த்த யாரும் பிறக்கவில்லை: செல்லூர் ராஜு
அதிமுக எனும் இந்த ஆலமரத்தை வெட்டி வீழ்த்த யாரும் இன்னும் பிறக்கவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வரும் நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு,“டிடிவி தினகரனை ஆர்.கே.நகர் மக்களிடம் கடந்த முறை கொண்டு சென்றது அதிமுகதான். கடந்த முறை அவருக்காக பிரச்சாரம் செய்தோம். அதன்பின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாங்கள் தினகரனை எதிர்த்து அதிமுக சார்பாக கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனனை வேட்பாளராக களமிறங்கியுள்ளோம். நாங்கள் எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக எங்களுக்கு எதிராக வாக்களித்திருக்கலாம். தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் தினகரன் முன்னிலை வகிக்கிறார். இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ணப்படவுள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்த தேர்தலில் திமுகவை மக்கள் புறக்கணித்துள்ளனர். திமுகதான் எங்களுக்கு எதிரி. மக்களுக்கு அதிமுக மீதோ, தமிழக அரசின் மீதோ எந்த வெறுப்பும் இல்லை. அதிமுக என்ற இயக்கம் மிகப்பெரிய ஆலமரம் இந்த இயக்கத்தை வெட்டி வீழ்த்த யாரும் பிறக்கவில்லை” என செல்லூர் ராஜு கூறினார்.