ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கே வெற்றி : அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனே வெற்றி பெறுவார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஆர்.கே நகரில் இறுதிக்கட்ட பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் இருசக்கர வாகனத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் என்ன முயற்சி மேற்கொண்டாலும், வெற்றி அதிமுகவிற்கே கிடைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், குறுக்குவழியில் திமுக வெற்றி பெற நினைத்தாலும், மதுசூதனனே வெற்றிவாகை சூடுவார் என ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார். இடைத்தேர்தலின் கருத்துக்கணிப்பு குறித்து பேசிய அவர், அது ”கருத்துத்திணிப்பு” என்றும், இவை எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு அதிமுக வெற்றி பெரும் என்றும் தெரிவித்தார். இன்று மாலை முதல் தேர்தல் நடைபெறும் 21 ஆம் தேதி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

