ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் முதல் வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்ய வருவோர் கார்களில் அணிவகுத்து வரக்கூடாது என்றும், 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குள் வர வண்டும் என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான முதல் வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி எனவும், வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

