ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நிறைவு: 5 மணிக்கு முன்பு வந்தவர்களுக்கு வாய்ப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 மணியுடன் வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்ததால், 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 258 வாக்குச்சாவடிகளில், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 மணிக்கு முன், வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 பேர் போட்டியில் களத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோர் காலையிலேயே தங்களது வாக்களித்தனர். ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படவுள்ளது.