சாலைகளில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். இதுவரை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும் அவர், " ஏரிகளில் நீர் நிரம்பினால் அருகாமையிலுள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். இவ்வளவு மழை பெய்த போதிலும் எங்கேயும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையும் மாறவில்லை. மிகவும் தாழ்வான பகுதிகளில் கூட மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இருப்பினும் ஊத்து போல தான் அங்கே தண்ணீர் வருகிறது. சாலைகளில் தேங்கியுள்ள நீர் முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டது. மற்ற நிலங்களில் நீர் இருந்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும்" என்று தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இதுவரை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.