நீட்டால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க அனுமதி மறுப்பு - ஸ்டாலின் கண்டனம்
சட்டப்பேரவையில் நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது “ சட்டப்பேரவையில் பிரணாப் முகர்ஜி உட்பட இறந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உடனே நான் அதில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் பெயர்களையும் இணைக்க வேண்டும் என சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தேன்.
ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. பேரவைக்கூட்டம் நாளையும் நாளை மறுநாள் மட்டுமே நடைபெறும் நிலையில் இந்த இரண்டு நாட்களும், நாட்டுப்பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு போதாது என பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் கூறியுள்ளார்.
பேரவைக் கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள், புதிய கல்வி கொள்கை குறித்தான பிரச்சனை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை தொடர்பான பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” என்றார்