‘பதவி விலகவும் தயார்’ காங். எம்.எல்.ஏக்கள் பேச்சால் கடுப்பான குமாரசாமி
பதவி விலகவும் தயார் என்று காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும், பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க, குமாரசாமியை முதல்வர் ஆக சம்மதித்தது. பெரும்பான்மையை சில இடங்களே மஜத கூட்டணி அரசுக்கு இருந்தது.
கர்நாடக சட்டசபை நிலவரம்:-
- காங்கிரஸ் + மஜத + பகுஜன் சமாஜ் = 117
- பாஜக + சுயேட்சைகள் = 106
- பெரும்பான்மைக்கு தேவை = 113
இந்நிலையில்தான், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருவர் மஜத கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் கலந்து கொள்ளவில்லை. அதோடு, இந்த நான்கு பேரும் பெங்களூரில் உள்ள விடுதி ஒன்றில் ஒன்றாக தங்கியிருந்தனர். அவர்களுடன் பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இதனால் கர்நாடக அரசியலில் பரப்புபரப்பு நிலவியது.
ஆனால், நான்கு எம்.எல்.ஏக்களும் தங்கள் பக்கமே உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் தலைமை தெரிவித்து வந்தது. தாங்கள் அனுப்பிய நோட்டீஸுக்கு 3 எம்.எல்.ஏக்கள் பதில் அளித்துவிட்டதாகவும் பின்னர் தெரிவித்தனர். அந்த பிரச்னை ஓய்வு சில நாட்கள் கூட முடியாத நிலையில், மஜத, காங்கிரஸ் இடையே புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“சித்தராமையா தான் எப்பொழுதும் எங்களுக்கு முதலமைச்சர். அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், துணை முதல்வரும் அமைச்சருமான பரமேஸ்வரா, ‘சித்தராமையா சிறந்த முதலமைச்சராக இருந்து வருகிறார். காங்கிர கட்சி எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை தலைவராக உள்ளார். எம்.எல்.ஏக்களுக்கு அவர்தான் முதலமைச்சர்’ என்று தெரிவித்தது மேலும் சர்ச்சையை அதிகபடுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வரம்பு மீறினால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவேன் என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த சிக்கல் குறித்து சித்தராமையா கூறுகையில், “தன்னுடைய துணை முதல்வரே இப்படியான வார்த்தைகளை கூறியது அவருக்கு வருத்தத்தை அளித்திருக்கும். ஊடகங்களான நீங்கள் தான் பிரச்னையை உருவாக்குகிறீர்கள். ஒவ்வொருவரிடமாக கேட்டு பிரச்னையை பெரிதுபடுத்துகிறீர்கள். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நான் குமாரசாமியிடம் பேசுவேன்” என்றார்.

