பாஜகவை வீழ்த்த எதையும் விட்டுக்கொடுக்கத் தயார்: புதுச்சேரி காங்கிரஸ்
புதுச்சேரியில் பாஜகவை வீழ்த்த எதையும் விட்டுக்கொடுக்கத் தயார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் திமுக காங்கிரஸ் கூட்டணி களமிறங்கி இருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி விவகாரம் முடிவுக்கு வந்த உடன், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மதசார்பற்ற கூட்டணியை இறுதி செய்வதென திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, என்.ஆர்.காங்கிரஸை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளையும் இந்தக் கூட்டணி முன்னெடுத்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த என்.ஆர் காங்கிரஸ், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியில் நீடிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்து கடந்த ஒரு வாரமாக பாஜக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் ரங்கசாமியிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சியில் இருக்கும் பாஜகவிற்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறு திமுக. புதுச்சேரியில் ஆட்சி அமைக்கவும் தங்கள் கூட்டணிக்கு தலைமை ஏற்கவும் என்.ஆர்.ரங்கசாமி வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார் திமுக முன்னாள் அமைச்சரும் காரைக்கால் மாவட்ட செயலாளருமான நசீம்.
கூட்டணிக்கு தலைமை ஏற்கும்படி என்.ஆர்.காங்கிரஸுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்றும், மக்கள் நலன் கருதி ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் ஏவி சுப்ரமணியன் புதியதலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளும் பதில்களும்:
கேள்வி: என்.ஆர்.காங்கிரஸை தலைமையேற்க வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்: என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி இணைந்து புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க முடியும். பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆதிக்கம் செலுத்தும் பாஜகவை வீழ்த்துவதற்காக எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறோம். இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டியது என்.ஆர்.காங்கிரஸ்தான்.
கேள்வி: பேச்சுவார்த்தை நடத்த என்.ஆர்.காங்கிரஸ் அழைப்பு விடுத்தால் காங்கிரஸ் கட்சி செல்லுமா?
பதில்: கட்சி மேலிடத்தில் பேசி கண்டிப்பாக பேச்சுவார்த்தைக்கு செல்லும்.
கேள்வி: என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைக்க நீங்கள் தயாரா?
பதில்: என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவை விட்டு வருவார்களா என்பது சந்தேகம். அவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்களுக்கு வந்த தகவல் இதுதான். இருந்தாலும் நாம் முயற்சி செய்து பார்க்கிறோம்.
கேள்வி: ஒருவேளை திமுக காங்கிரஸை விட்டு செல்ல முயன்றாலும் அதற்கு தயாரா?
பதில்: நாங்கள் எல்லோருமே மக்கள் நன்மைக்காகத்தான் இருக்கிறோம். தமிழகம் போன்று புதுச்சேரியிலும் கூட்டணி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் இந்த கேள்விக்கு இடம் இருக்காது என்று நினைக்கிறேன்.