பெரியார் சிலை உடைப்பும்.. ரத யாத்திரை வருகையும்.. தமிழகம் கண்ட மாற்றம். !
நள்ளிரவில் பெரியார் சிலை உடைப்பு.. காலையில் தமிழகத்திற்குள் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரை.. தலைவர்கள் கைது என ஒட்டுமொத்த தமிழகம் ஒரு ஆட்டம் கண்டிருக்கிறது இன்று.
கேரளாவை மையமாகக் கொண்டு மகாராஷ்டிராவில் இயங்கும் ஸ்ரீ ராம தாஸ மிஷன் யூனிவர்சல் சொசைட்டி எனும் அமைப்பு சார்பில், அயோத்தியில் உள்ள கரசேவக்புரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கப்பட்டதுதான் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை. அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது, இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை நிறுவுவது, ராமாயணத்தை பாடத்திட்டமாகக் கொண்டு வருவது, உலக இந்து தினம் உருவாக்கி கடைப்பிடிப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை இந்த ரத யாத்திதை கடந்து வருகிறது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக இன்று தமிழகத்தை அடைவதாக இருந்தது. ஆனால் ரத யாத்திரைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதலில் இருந்தே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்து நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டார். 144 தடை உத்தரவில் அவர் கூறும்போது, “ ரத யாத்திரையில் சிக்கலை உருவாக்க சிலர் திட்டமிட்டுள்ளதால்,144 தடை சட்டம் பிறப்பிப்பதாக’ கூறியிருந்தார். இதனிடையே ரத யாத்திரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன், உள்ளிட்ட பல தலைவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதுமட்டுமில்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். ரத யாத்திரைக்கு எதிராக குரல் கொடுத்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த வேல்முருகன், ‘ 144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்காதது’ எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.
பிரதான எதிர்க்கட்சியும் தன் பங்கிற்கு சட்டப்பேரவையில் ரத யாத்திரைக்கு எதிராக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசும்போது, ‘ தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா..? அல்லது பாரதிய ஜனதா ஆட்சியா..? மதசார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மை தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது’ என கடுமையாக பேசினார்.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் பழனிசாமி, ‘ அனைத்து மதத்திற்கும் சம உரிமை உண்டு. தமிழகத்தில் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்’ என்றார். தொடர்ந்து முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றம் செய்யப்பட, ஸ்டாலின் தலைமையில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டாலின் சொன்னது இதுதான் ‘பெரியார், அண்ணா பிறந்த மண்ணில் மத கலவரத்தை தூண்டாதே’ என்பதுதான். ‘மற்ற மாநிலங்களில் எல்லாம் பெரியார் பிறக்கவில்லை. தமிழகத்தில்தான் பெரியார் பிறந்தார். அந்த உணர்வு எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் பிறந்த அண்ணா எங்களை உருவாக்கி இருக்கிறார்.’ என்றும் ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.
‘அமைதியாக யாத்திரை செல்லும் போது நாம் சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி அனுமதி மறுப்பது தவறான ஒரு செயல். கைது நடவடிக்கை முன்னெச்சரிக்கைக்காக எடுக்கப்பட்டது. இது பெரியார் மண், குழந்தைக்கு எதையாவது காட்டி ஏமாற்றுவது போல் ரதத்தை காட்டி எல்லாம் இங்கு ஏமாற்றமுடியாது. யாரை ஆதரிக்க வேண்டும்? யாரை நிராகரிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்’ என அமைச்சர் ஜெயக்குமார் ரத யாத்திரை அனுமதிக்கான தன் காரணத்தை சொல்லியிருக்கிறார்.
ரத யாத்திரை தொடர்பான சர்ச்சைகள் இன்று அரங்கேறும் முன்னே நேற்று இரவோடு இரவாக புதுக்கோட்டையில் பெரியார் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை விடுதியில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலையின் தலையை தூண்டாக்கி சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆலங்குடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் சிலை உடைப்பும், ரத யாத்திதை வருகையும் ஒருசேர நடைபெற்றிருப்பது தமிழக மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை என்பதுதான் உண்மை.