ராஜபட்சவை பிரதமராக்கியது ஏன்? நடந்தது என்ன? - அதிபர் சிறிசேன விளக்கம்
ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் சிறிசேன திடீரென பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். இதனால், ஒரே நேரத்தில் இரண்டு பிரதமரா? என்ற கேள்வி எழுந்தது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம், இலங்கை தாண்டி உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தன்னுடைய அதிரடியான அரசியல் முடிவுகள் குறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேன இலங்கை நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசியதன் விவரம்:-
- ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது.
- கூட்டாக முடிவு எடுக்கக் கூடாது என்பதில் ரணில் பிடிவாதமாக இருந்தார்.
- இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது.
- கொல்ல சதி நடந்ததால் வேறு வழியின்றி ராஜபட்சேவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று.
- சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி அரசியலமைப்பின் படியே ராஜபட்ச நியமனம் நடைபெற்றது.
- ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கியதில் அரசியலமைப்பு விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை.
- 2015ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றது முதலே விக்ரமசிங்கேவின் நடவடிக்கை எதிர்பாராத வகையில் இருந்து வந்தது
- தன்னுடைய கர்வம் காரணமாகவே அவர் நீக்கம் செய்யப்பட்டார்
- மக்களை பற்றிய சிந்தனையே இல்லாத ஒரு கூட்டத்தை தன்னுடன் வைத்துக் கொண்டு விக்ரமசிங்கே ஆட்சி செய்து வந்தார்
- ஊழல்கள் செய்து நல்ல ஆட்சி என்பதற்காக அர்த்தத்தையே அழித்துவிட்டார்
- கொள்கை முடிவுகள் எடுப்பதில் எங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருந்தது