பாஜகவுக்கு வாக்களித்த மாயாவதி கட்சி எம்.எல்.ஏ சஸ்பெண்ட்
மாநிலங்களவை தேர்தலில் பாரதிய ஜனதாக கட்சிக்கு மாற்றி வாக்களித்த தனது கட்சி எம்.எல்.ஏவை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
நாடு முழுவதும் 25 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதிக்கு பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே போட்டி நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ அனில் சிங், பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தார். வியாழன் இரவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அனில் சிங் சந்தித்த நிலையில் அவர் மாற்றி வாக்களித்தார். இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பாஜகவுக்கு வாக்களித்த அனில் சிங்கை கட்சியில் இருந்து மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “நேற்றைய தேர்தலில் பாஜக தனது அதிகார பலத்தை தவறாக பயன்படுத்தியது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியை உடைக்க முயற்சிகள் செய்தது. நெறியற்ற முறையில் கிடைத்த வெற்றியால் இடைத்தேர்தலில் அவர்கள் அடைந்த மிகப்பெரிய தோல்வியை மறைக்க முடியாது. அதேபோல் இது பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி உறவையும் பாதிக்காது” என்றார்.