சென்னையில் தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை திறந்து வைத்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கவுள்ள சூழ்நிலையில், முதல் முறையாக எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மன்றம் என்ற பெயரில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளையும், உறுப்பினர் சேர்க்கையும் ஏற்கெனவே தொடங்கியுள்ளார். இன்னும் அதிகாரப்பூர்வமாக கட்சியின் பெயரையும், கொடியையும், கொள்கைகளையும் அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி.
அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர்., இப்போது வரை அக்கட்சியினர் மத்தியும், ஏழை மக்கள் மத்தியில் மகத்தான அரசியல் தலைவர்களில் ஒருவராக பார்கப்படுகிறார். இந்நிலையில் எம்.ஜி.ஆர்., சிலையை ரஜினி திறந்து வைத்தது, அதிமுக கட்சியினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை திறப்புக்குப் பின் கல்லூரி மாணவர்கள், மக்கள் மத்தியில் ரஜினி உரையாற்றுகிறார். அரசியல் அறிவிக்குப்பின் ரஜினி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைத் துறையின் முக்கிய நபர்கள் பங்கேற்றுள்ளனர்.