சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினி காந்த், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை புகழ்ந்து தள்ளினார்.
சென்னையில் தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை திறந்து வைத்தார். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலை திறப்புக்குப் பின் கல்லூரி மாணவர்கள், மக்கள் மத்தியில் பேசிய ரஜினி காந்த், எம்.ஜி.ஆர் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி புகழ்ந்து தள்ளினார். ரஜினி பேசுகையில், “திரையுலகில் பராசக்தி படத்திற்கு பிறகு சிவாஜி கணேசனின் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தார். தனது நடிப்பால் இந்திய திரையுலகையே சிவாஜி திரும்பி பார்க்க வைத்தார். சிவாஜி கணேசனின் வருகை பிறகு எம்.ஜி.ஆர் மீது பலரும் நம்பிக்கை வைக்கவில்லை. பட வாய்ப்புகளையும் குறைத்தனர். பின்னர், எம்.ஜி.ஆர் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நாடோடி மன்னன் படத்தில் அவதாரம் எடுத்தார். நாடோடி மன்னன் மிகப்பெரிய காவியப்படம். இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர்களே எம்.ஜி.ஆரை பார்த்து பயந்தார்கள்.
அதேபோல், இந்தியாவிலேயே சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் கருணாநிதி தான். அப்படிபட்ட கருணாநிதியையே 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தார் என்றால் அதுதான் எம்.ஜி.ஆர்.க்கு அப்படியொரு சிறந்த ஆட்சியை எம்.ஜி.ஆர் வழங்கினார். அதனால்தான், எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அவரை பார்க்காமலேயே மக்கள் வெற்றியை அளித்தனர்” என்றார்.