மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘காலா’ இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முறைப்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சென்னைக்கு பலர் வந்து சேர்ந்தனர்.
இதனையடுத்து, போயஸ் கார்டன் இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள், ஒழுங்கு நடவடிக்கை குழு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்கள் மன்றத்தின் கிளை மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களை ஜூன் மாதத்திற்குள் நியமிக்க மாவட்ட செயலாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். இந்தப் பணிகள் முடிந்த பின்னர் மாநாடு நடத்துவது குறித்து மீண்டும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என ரஜினிகாந்த் தெரிவித்ததாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்த படங்களை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இது ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததாகவும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கோவையில் அடுத்த மாதம் ரஜினி மக்கள் மன்றத்தின் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் பாணியில் ஒரு பக்கம் கட்சி மறுபக்கம் சினிமா என தொடர ரஜினிகாந்த் திட்டம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

