“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு?” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டுவருவது குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தல் களநிலவரங்கள் எப்படி உள்ளன என்பது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “நாங்குநேரியில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்த பிறகு அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. கண்டிப்பாக நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவரிடம் ராஜிவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் ராஜிவ்காந்தி கொலை குறித்து பேசும்போது சீமான் நாவை அடக்கிப் பேசவேண்டும் என்றார். அதனையடுத்த சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை கட்சியின் தலைமை பொறுப்புக்கு கொண்டுவருவது குறித்து தலைமை முடிவெடுக்கும். அதிமுக தலைமை எடுக்கும் முடிவை நான் ஆதரிப்பேன்’ என்றார்.