
குஜராத்தில் உள்ள தனேரா நகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராக்குல் காந்தியின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ராகுல் காந்தி குஜராத்தின் லால் சவுக் பகுதியில் இருந்து தனேராவில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடிற்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு நபர் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அதில் காரின் பின்பகுதி கண்ணாடி உடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி காயமின்றி தப்பியதாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பனாஸ்கந்தாவின் எஸ்.பி. நீரஜ் பட்குஜர் கூறும்போது, ராகுல்காந்தி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்கச் சென்ற போது, அவரின் கார் மீது ஒருவர் கல்வீசி தாக்கினார், ஆனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. காரின் பின் கண்ணாடி மட்டும் உடைந்தது. கல் வீசியவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறோம். முன்னதாக ராகுல் காந்தி பார்வையிடச் சென்ற சில இடங்களில் மக்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டம் செய்தனர் என்றார்.
ராகுல் காந்தி பார்வையிடச் சென்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பாஜக குதிரைபேரம் செய்ய முயற்சி செய்வதாகக் கூறி பெங்களூரு சொகுசு விடுதியில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி, இந்த கொடூரத் தாக்குதலை பாஜக குண்டர்கள் தான் திட்டமிட்டு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் ராகுல் காந்தியின் காருடன் சென்ற பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.