“பாஜகவை எதிர்த்து ராகுல் போட்டியிட வேண்டும்” - முதல்வர் பினராயி
தனது பலத்தை நிரூபிக்க பாஜக போட்டியிடும் தொகுதியில் ராகுல் எதிர்த்து போட்டியிட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஏ.கே.அந்தோணி, இரண்டு மக்களவைத் தொகுதிகளிலிருந்து போட்டியிட ராகுல்காந்தி ஒப்புதல் தெரிவித்திருப்பதாக கூறினார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியம் இல்லை என்றும், அவர் பாஜகவை எதிர்த்து போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போட்டியிடுவதால் காங்கிரஸுக்கு கடும் போட்டியாக இருப்போம் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

