ராகுல்காந்தி தென் இந்தியாவின் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு !
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான அமேதி மட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொகுதியிலும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகம், கேரளா, கர்நாடகாவில் உள்ள தலைவர்கள், தங்களின் விருப்பப்படி ஒரு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, மற்றும் சிவகங்கையிலும், கேரளாவில் வயநாடு தொகுதியிலும், கர்நாடகாவில் மத்திய பெங்களூரு, பிதார் மற்றும் மைசூரு ஆகிய ஏதாவது ஒரு தொகுதியிலும் ராகுல் போட்டியிட வேண்டும் என அம்மாநிலத் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
1978 ஆம் ஆண்டு இந்திரா காந்தி கர்நாடகாவின் சிக்மங்கலூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கர்நாடகாவின் பெல்லாரியில் போட்டியிட்ட வரலாறும் இருப்பதால் ராகுல் காந்தியும் அமேதி தவிர தென்னிந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியை இரண்டாவது தொகுதியாகப் போட்டியிட தேர்வு செய்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.