ரஜினியின் கருத்து அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கிறது : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சூப்பர்ஸ்டார் அவர்கள் சொல்லி இருப்பது எங்களுக்கு தான் ஆதரவு என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை மருத்துவ பிரிவினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். முன்னதாக காஷ்மீர் புல்மாவா தற்கொலைப்படை தாக்குதலில் இறந்த 44 மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ரஜினிகாந்த் பொதுமக்களுக்கு எந்த அரசு தண்ணீர் தருகிறதோ அந்த அரசுக்கு ஆதரவளியுங்கள் என்ற கருத்துக்கு பதில் அளித்தார்.
அப்போது “இன்றைய தமிழக மக்களின் நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், இதை அனைவரும் அறிவார்கள். தமிழகத்திற்கு தடையில்லா தண்ணீர் கிடைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
சூப்பர்ஸ்டார் அவர்கள் சொல்லி இருப்பது எங்களுக்கு தான் ஆதரவு ஏனென்றால் வறட்சியிலும் சரியான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தி தேர்தல் மேலாண்மை துறையில் இருந்து குடிநீருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்துள்ளார். எனவே தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பது மட்டுமல்லாமல் தடையில்லாமல் குடிநீர் கிடைப்பதற்கும் முதல்வர் விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு மாற்று ஏற்பாடு செய்துள்ளார்.எங்கெல்லாம் நமக்கு நீர் கிடைக்கிறதோ அதனை கண்டுபிடித்து ஏற்கனவே இருக்கக்கூடிய அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி பல்வேறு திட்டங்கள் உருவாகி மக்களுக்கு நீர் கிடைக்க மிகச் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே ரஜினி கூறுவது அதிமுகவுக்கு தான் ஆதரவு என்று தெரிகிறது”என்று கூறினார்.