கத்தாரில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க வேண்டும்: சுஷ்மாவுக்கு ஸ்டாலின் கடிதம்
கத்தாருடன் சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகள் உறவைத் துண்டித்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட 6.5 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளர்.
அவர் எழுதிய கடிதத்தில், “ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள கத்தார், தீவிரவாதிகளுக்கு உதவி செய்கின்றது போன்ற காரணங்களைச் சொல்லி, சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் கத்தார் நாட்டுடனான வர்த்தக, பொருளாதார, தூதரக உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளதால் கத்தாரில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு வாழும் இந்தியர்களின் உறவினர்கள் இந்த பிரச்னையால் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பிரச்சனையில் இந்திய வெளியுறவுத்துறை தலையிட்டு அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இது வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பிரச்னைதான் என்றாலும், அங்குள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமானது. உங்களுடைய தலைமையில் இந்த பிரச்னை விரைவாக சரி செய்யப்படும் என்று நம்புகிறேன். இந்த சவாலான சூழலை கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் கவனமாகக் கையாண்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.