விஷப்பரீட்சையில் இறங்காதீர்கள் கமல் : கிருஷ்ணசாமி
1992 இல் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த படத்தால் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக சாதிப் போர் நடக்கிறது புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
"தேவர் மகன் 2" திரைப்படத்துக்கு பதிலாக "தேவேந்திரர் மகன்" என பெயரிட்டால் கமல்ஹாசன் மையவாதியாக இருக்க முடியும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தேவேந்திரர் மகன் என்ற பெயரில் படம் எடுத்தால் அது ஓடும் என்றும் மாறாக மற்றொரு பெயரில் இரண்டாம் பாகமாக படமெடுத்தால் அது முடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஏற்கெனவே 1992 இல் கமல்ஹாசன் எடுத்த படத்தால் தென்மாவட்டங்களில் இருபெரும் சமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். 1992-ஆம் ஆண்டு வெளியான படத்தால் விதைக்கப்பட்ட சாதியத்தால் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக சாதிப் போர் நடந்து கொண்டிருப்பதாக சாடியுள்ளார். அந்தப் படத்தால் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரில் எண்ணற்றோர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு முறை விஷப் பரீட்சையில் இறங்காதீர்கள் என கமல்ஹாசனை எச்சரித்துள்ளார்.
வலுத்தவர்களுக்கே மீண்டும் இனிப்பை வழங்குவது எந்த வகையிலும் உகந்தது அல்ல என்றும் யார் இனிப்புக்காக ஏங்குகிறார்களோ அவர்களுக்கு வழங்குவது தான், உகந்தது, உத்தமமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மைய அரசியல் கொள்கையை கையாள வேண்டுமென்றால் மறைக்கப்படும் அடையாளங்களை மீட்கக் போராடும் மக்களை மையப்படுத்தி தேவேந்திரர் மகன் என படமெடுங்கள் என கமல்ஹாசனை, கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.