“உடன்படாதவர்களை பாஜக தேச விரோதியாக கருதியதில்லை” - அத்வானி அறிக்கை

“உடன்படாதவர்களை பாஜக தேச விரோதியாக கருதியதில்லை” - அத்வானி அறிக்கை
“உடன்படாதவர்களை பாஜக தேச விரோதியாக கருதியதில்லை” - அத்வானி அறிக்கை

‘நாடுதான் முதன்மையானது; அடுத்தது கட்சி, கடைசியில்தான் சொந்த நலன்’ என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

ஏப்ரல் 6ம் தேதி பாஜக உதயமான நாளையொட்டி எல்.கே.அத்வானி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பு, நாட்டின் பன்முகத்தன்மை, கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஏப்ரல் 6ம் தேதி பாஜக தன்னுடைய நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் 1991ம் ஆண்டு முதல் 6 முறை எம்.பியாக தேர்வு செய்த மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்களது அன்பும் ஆதரவும் எப்பொழுதும் என்னுடன் இருக்கும். 

14 வயதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தது முதல் தாய்நாட்டிற்காக சேவை செய்வதே என்னுடைய லட்சியமாகவும், நோக்கமாகவும் இருந்து வந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகால என்னுடைய அரசியல் வாழ்க்கையையும், கட்சியையும் பிரித்து பார்க்க முடியாது. தீன்தயாள் உபத்யாயா, வாஜ்பாய் உள்ளிட்ட சிறந்த தலைவர்களுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளேன். ‘நாடுதான் முதன்மையானது, அடுத்தது கட்சி, கடையில்தான் தனிப்பட்ட வாழ்க்கை’ என்பதுதான் என்னை வழிநடத்திய கொள்கை. எல்லா தருணங்களிலும் இந்தக் கொள்கையை கடைபிடித்து வந்துள்ளேன்.

பன்முகத்தன்மை மற்றும் கருத்துச் சுதந்திரம்தான் இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான அம்சம். கருத்து ரீதியாக எங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை எதிரிகளாக பாஜக ஒருபோதும் கருதியதில்லை. இந்திய தேசியவாதம் என்ற எங்கள் அரசியல் கருத்துக்களில் உடன்படாதவர்களை நாங்கள் தேச விரோதிகளாக கருதியதில்லை.  

ஒவ்வொரு குடிமகனும் அவர்கள் விருப்பப்படி வாழவும், பிடித்தமான அரசியலை தேர்வு செய்வதும் அவர்களது உரிமை என்பதில் கட்சி உறுதியாக உள்ளது. ஜனநாயகம், ஜனநாயக மரபுகளின் பாதுகாப்பு கட்சிக்குள் இருப்பதை நினைத்து பாஜக பெருமை கொள்கிறது. அதனால், ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com