குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போது 6 ஆண்டுகள் தடை இருக்கிறது. ஆனால், தண்டனை பெற்றவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையமும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் பதில் மனு அளித்திருந்த தேர்தல் ஆணையம், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு வரும் ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.