விடிந்தபின் எரியும் தெரு விளக்குகள்: வேதனை அடைந்த கிரண்பேடி
புதுச்சேரியில் தெரு விளக்குகள் விடிந்த பின்னும் எரிவதால் பல லட்சம் ரூபாய் அரசு பணம் வீணாவதாக துணை நிலை ஆளுநர்
கிரண்பேடி வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி, அம்மாநிலத்தில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு குறைகளை கூறி
வருகிறார். இதனால் ஆளும் கட்சியான காங்கிரஸுக்கும், அவருக்கும் இடையே அதிகார மற்றும் கருத்து மோதல்கள் இருந்து
வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தெரு விளக்குகள், காலையில் சூரிய உதயத்திற்கு பின்பும் எரிவதால் அரசு பணம்
லட்சக்கணக்கில் வீணடிக்கப்படுவதாக கிரண்பேடி வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் புதுச்சேரிக்கு ரூ.1,106 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு துறைகள் மற்றும்
இதர மின் விநியோக திட்டங்களில் செய்யப்பட வேண்டிய, மின் சிக்கன நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் அவர்
திட்டமிட்டுள்ளார். இதற்காக மின்துறை கண்காணிப்பு பொறியாளரை இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, ஆலோசிக்க
இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

