"புதுச்சேரி அரசு ஊழல் நிறைந்ததாக இருந்தது" ஜே.பி.நட்டா பரப்புரை!
புதுச்சேரியில், கடந்த 5 ஆண்டுகால நாராயணசாமி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்த அரசாக இருந்தது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனுக்கு ஆதரவாக வாக்குகள் கோரி, திருநள்ளாறில் இன்று பிற்பகம் இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்ட ஜெ.பி.நட்டா பேசியபோது, "புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து, தேசிய ஜனநாயக் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டு கால நாராயணசாமி தலைமையிலான அரசு ஊழல்கள் நிறைந்த அரசாக இருந்தது. இளைஞர்கள், விவசாயிகள உள்ளிட்ட எல்லா தரப்பு மக்களும் புறக்கணிக்கப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, காரைக்காலுக்கு ஜிப்மர் கிளை கொண்டு வந்தேன். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதனை மேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகள் மேற்கொண்டும், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் யார் ஒருவரும் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படவில்லை. மேலும் இலங்கையில் சிறையிலிருந்த நூற்றுக் கணக்கான மீனவர்கள் மீட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளனர். நீங்கள் தாமரையை மலரச் செய்தால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் வளர்ச்சி பெறும்” என பேசினார்.