பகலில் டார்ச் லைட் அடித்து புதுவிதமான போராட்டம் நடத்திய திருநின்றவூர் பொதுமக்கள்

பகலில் டார்ச் லைட் அடித்து புதுவிதமான போராட்டம் நடத்திய திருநின்றவூர் பொதுமக்கள்
பகலில் டார்ச் லைட் அடித்து புதுவிதமான போராட்டம் நடத்திய திருநின்றவூர் பொதுமக்கள்

திருநின்றவூரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் அவதிப்பட்ட பொதுமக்கள் பகலில் டார்ச் லைட் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் அன்னை இந்திரா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சி.எம்.டி.ஏவால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை பிரிவு உருவாக்கப்பட்டது. இங்கு 700-க்கும் மேற்பட்ட வீடுகளில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நகரில் 3 பிரதான சாலைகள், 20க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகள் அமைந்துள்ளன. இதில், ஒரே ஒரு பிரதான சாலை மட்டும் ரூ.1கோடி செலவில் தார் சாலையாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு போடப்பட்டது. அந்த சாலையும், தற்போது குண்டும் குழியுமாக மாறி கிடக்கிறது. இதோடு மட்டுமில்லாமல், குறுக்கு சாலைகள் பல ஆண்டுகளாக போடப்படாமலே கிடக்கிறது. 

இதனால், சிறு மழை பெய்தால் கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விடுகின்றன. இதனால் பாதசாரிகள் அறவே நடமாட முடியவில்லை. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலைகளில் உள்ள பள்ளங்களில் விழுந்து செல்கின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் கூட வர முடியவில்லை.

மேலும் இப்பகுதிகளில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் வாரத்திற்கு ஒருமுறைதான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் தனியார் டிராக்டரில் வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ.10க்கு வாங்கி குடிக்கும் அவலநிலை உள்ளது. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வடிகால் வசதி அறவே இல்லை. இதனால், சிறுமழை பெய்தால் கூட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. 

தற்போது விட்டு விட்டு பெய்யும் மழையாலும் ஆங்காங்கே காலி இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை தாக்குகின்றன. இந்த கொசுக்கடியால் உருவாகும் காய்ச்சல் எந்த வகையானது என தெரியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட பிரச்னைகள் குறித்து பொதுநல சங்கம் சார்பில் பலமுறை தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் பல ஆண்டுகளாக குடியிருப்பு வாசிகள் அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து இன்று அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வீதிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் குண்டும் குழியுமான சாலையில் 'டார்ச் லைட்' அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து பொது நல சங்க நிர்வாகிகள் கூறுகையில், எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து திருநின்றவூர் பேரூராட்சிக்கு வரி செலுத்தி வருகிறோம். இருந்த போதிலும் பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தராமல் பல ஆண்டாக புறக்கணித்து வருகிறது. இனி மேலாவது, எங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர், வடிகால் உள்ளிட்ட வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் பொதுமக்களை திரட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com