“நோபல் பரிசுக்கு மோடியை பரிந்துரை செய்யுங்கள்” - தமிழிசை கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடிக்கு நோபல் பரிசு வழங்க அனைவரும் பரிந்துரைக்க வேண்டும் என பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ பாதுகாப்புத் திட்டம் உலகிலேயே மிகப் பெரிய காப்பீட்டுத் திட்டம் என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக நோபல் பரிசு பெறுவதற்கு பிரதமர் மோடி தகுதியானவர் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதற்கான பரிந்துரை கோரிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க ஜனவரி 31 கடைசி தேதி என்பதை சுட்டிக்காட்டியுளார். ஆகையால், எம்.பி.க்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட தகுதி பெற்ற அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.