விநாயகர் சதுர்த்தி | தங்கத்தில் கொழுக்கட்டை.. ஒரு கிலோ இவ்ளோ விலையா? இதைச் சாப்பிடலாமா?
விநாயகர் சதுர்த்தி என்றாலே... விநாயகர் சிலைகளோடு நினைவுக்கு வருவது, கொழுக்கட்டை, சுண்டல், லட்டு போன்ற விநாயகருக்கு படைக்கப்படும் தின்பண்டப் பொருட்கள்தான்... அப்படி செய்யப்படும் கொழுக்கட்டையை தங்கத்தில் செய்து விற்பனை செய்யப்படும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தங்கக் கொழுக்கட்டை எங்கு செய்யப்பட்டது, அதன் விலை எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்...
மகாராஷ்டிராவின் நாசிக்கில் 'சாகர் ஸ்வீட்ஸ்' என்ற பெயரில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் உரிமையாளர் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக தங்க முலாம் பூசப்பட்ட மோதாக்களை கடந்த 2021 முதல் செய்து வருகிறார். இவரது கடையில் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட மோதாக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் 24 காரட் சாப்பிடக்கூடிய தங்கத் தகடு கொண்டு அலங்கரிக்கப்பட்ட மோதாக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
2021-ம் ஆண்டு முதன்முதலாக ஒரு கிலோ ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது தங்கத்தின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஒரு கிலோ ரூ.27 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விலையையும் பொருட்படுத்தாமல் அதனைப் பலரும் வாங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்தத் தங்க மோதாக்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி, இதைச் சாப்பிட முடியுமா? இதை ஏன் வாங்குகிறார்கள் என்று பலரது கேள்வியையும் எழுப்பியுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட இந்த மோதாக்களைச் சாப்பிட முடியுமா என்ற கேள்விக்கு... உணவில் பயன்படுத்தப்படும் Food-grade edible gold, Gold அல்லது INS 175 / E175 என்ற food additive-ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உணவில் பயன்படுத்தப்படும் தங்கம், உணவுப் பயன்பாட்டுக்கான தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். இதுதொடர்பாக, WHO மற்றும் FAO-வின் கூட்டு நிபுணர் குழுவான JECFA, metallic gold-ஐ மதிப்பீடு செய்துள்ளது. JECFA-வின் தரவுத்தளத்தில், metallic gold-ன் உணவுப் பயன்பாடு “Not considered to present a hazard” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் பயன்பாடு “Very limited use” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், metallic gold என்பது சாதாரண சூழலில் மிகவும் குறைவாக வினைபுரியும் தன்மை கொண்டது. இதன் காரணமாக, உணவில் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும் edible gold-ன் உடலுக்குள் செல்லும் அளவு மற்றும் அதன் உடலால் உறிஞ்சப்படும் தன்மை குறைவாக இருப்பதால் அது செரிமான மண்டலம் வழியாக கழிவாக வெளியேற்றப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இங்கே ஒரு முக்கியமான விஷயம்... Food-grade edible gold-ஐ மட்டுமே உணவில் பயன்படுத்த வேண்டும். நகைகளில் பயன்படுத்தப்படும் தங்கம் அல்லது வேறு உலோகங்கள் கலந்த gold coating-ஐ உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உணவில் பயன்படுத்தப்படும் தங்கம் அதற்கான food-grade specifications-ஐ பூர்த்தி செய்திருக்க வேண்டும். தங்கம் இருக்கும் விலைக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனை செய்யப்படும் இந்த வித்தியாசமான தங்க கொழுக்கட்டைகள் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர

