கருத்து சொல்லமுடியாவிட்டால் 4-வது தூண் என்பதற்கு அர்த்தமில்லை: பத்திரிக்கையாளர்கள்
கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர் மன்றம், கருத்தைக் கூட வெளியிட முடியாத நிலையில், நான்காவது தூண் என்று சொல்வதில் என்ன பொருளிருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.
கந்துவட்டி கொடுமை குறித்து அரசை விமர்சித்து கேலி சித்திரம் வரைந்த புகாரில் கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பத்திரிக்கையாளர்கள் மன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்துரிமையின் கருத்தை நெரிக்கும் விதமாக பாலா கைது செய்யப்பட்டுள்ளார். பாலாவை விடுவிக்க பத்திரிக்கையாளர்கள் ஒன்று திரள வேண்டும். கருத்தைக் கூட வெளியிட முடியாத நிலையில், நான்காவது தூண் என்று சொல்வதில் என்ன பொருளிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை திரும்பப்பெற்று உடனடியாக தமிழக அரசு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், அதிமுக அரசு கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை; அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.